குற்றம்

லைக்ஸ்களை குவிக்க அமைச்சர் PTR வீட்டின் முன் இளைஞர்கள் பைக் ரேஸ்.. மதுரை போலீஸ் அதிரடி!

webteam

சமூக வலைதளங்களில் லைக்குகளை பெறுவதற்காக மதுரையில் நிதியமைச்சரின் வீட்டின் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டமுள்ள சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில் மதுரை மாநகர் தல்லாகுளம் வல்லபாய் சாலை பகுதியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டின் அருகே இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து உதவி ஆய்வாளர் சண்முகநாதன் காவலர்களுடன் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அந்த சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்ட கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது, நல்லசிவம், சஜன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மதன்குமார், அதலை பகுதியைச் சேர்ந்த பிரதீஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பைக் ரேஸ் செல்வதை வீடியோவாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவு செய்து அதன் மூலமாக லைக்ஸ் பெறுவதற்காக இது போன்ற சாகசத்தில் ஈடுபட்ட நிலையில், அதற்கு பயன்படுத்திய கேமரா மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்த தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகரில் இதுபோன்று சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.