சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு சாகும்வரை தூக்கு தண்டனை அளித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் லெனின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரின் 14 வயது மகள் தனலஷ்மி. இவர் அருகில் உள்ள பையனூர் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தனலஷ்மி வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனலஷ்மி தனிமையில் இருந்ததை பயன்படுத்தி கொண்ட ஆலத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் (24), அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரை சித்ரவதை செய்து கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அசோக்குமாருக்கு பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டணையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாத தண்டணை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். அதேபோல், கொலைக் குற்றத்திற்கு சாகும்வரை தூக்குதண்டணை வழங்கி நீதிபதி வேல்முருகன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.