சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கை, கால்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 21-ஆம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், ரத்தம் படிந்த நிலையில் பெண்ணின் வலது கையும், 2 கால்களும் துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்டன. தலையும், உடலும் இல்லாததால், கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியவில்லை.மிகவும் சிக்கலாக கருதப்படும் இந்த வழக்கில், உடலுறுப்புகளை வைத்து கொல்லப்பட்ட பெண் யார் என கண்டறிய விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வெட்டப்பட்ட கையின் விரல் ரேகையை வைத்து பெண் யார் என்பதை கண்டறிந்துவிடலாம் என திட்டமிட்ட போலீசார், அரசின் ஆதார் அமைப்பின் உதவியை நாடினர்.
இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாதால் காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தலை மற்றும் உடல் இல்லாத நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் சிரமமான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் சந்தியா எனவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து பள்ளிக்கரணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலகிருஷ்ணன் திரைப்பட இயக்குநர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக மனைவியைக் கொன்றதாக பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சந்தியா, சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்தார். காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரித்ததின் பேரில், கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரியவந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சந்தியாவின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.