சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால் யாருடையது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 21-ஆம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், ரத்தம் படிந்த நிலையில் பெண்ணின் வலது கையும், 2 கால்களும் துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்டன. தலையும், உடலும் இல்லாததால், கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியவில்லை.
மிகவும் சிக்கலாக கருதப்படும் இந்த வழக்கில், உடலுறுப்புகளை வைத்து கொல்லப்பட்ட பெண் யார் என கண்டறிய விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வெட்டப்பட்ட கையின் விரல் ரேகையை வைத்து பெண் யார் என்பதை கண்டறிந்துவிடலாம் என திட்டமிட்ட போலீசார், அரசின் ஆதார் அமைப்பின் உதவியை நாடினர். ஆனால், இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாது என ஆதார் அமைப்பு கைவிரித்துவிட்டதால், முதல் முயற்சியிலேயே காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
துண்டாக்கப்பட்ட அந்த கையில் சிவன் பார்வதி படமும், ட்ராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த தகவல்களை வைத்தும், வெட்டப்பட்ட கை, கால்கள் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைப் பையில் உள்ள முகவரியை வைத்தும் ஏதேனும் தகவல் கிடைக்குமா என விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் சந்தியா என்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொலை தொடர்பாக பெண்ணின் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்ததாகவும் அங்கு தான் கொலை நடந்து இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டது ஏன்? எப்படி கொலை செய்யப்பட்டது? பெண்ணின் உடல்கள் எங்கே? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தேடும் விதத்தில் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.