குற்றம்

கால்நடை தீவன ஊழல்: 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு

நிவேதா ஜெகராஜா

கால்நடை தீவன ஊழல் தொடர்புடைய மேலும் ஒரு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 4வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து, 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

பீகார் முதலமைச்சராக லாலு பிராசத் யாதவ் இருந்தபோது 1990களில் தும்கா கருவூலத்தில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 12 பேர் குற்றமற்றவர்கள் என்றும் ராஞ்சி நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதற்கு முன்னரேவும் கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 3 வழக்குகளிலும் லாலு பிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2018-ல் 4-வது வழக்கிலும் அவரை குற்றவாளியாக அறிவித்து கூடுதல் சிறைதண்டனையை விதித்திருந்தது நீதிமன்றம்.

அந்தநேரத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு கால்நடைத் தீவன முறைகேடு வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த நிலுவை வழக்கின்படி (5-வது வழக்கு), லாலு பிரசாத் யாதவ் `டோரண்டா கருவூலத்திலிருந்து முறைகேடாக பணம் எடுத்தார்; ரூ.139.35 கோடி முறைகேடு செய்துள்ளார், கால்நடைகளுக்கு தீவனம் - மருந்து உள்ளிட்டவற்றை வாங்கியதாக பொய்யாக கணக்கு காட்டினார்; அரசு பணத்தை கையாடல் செய்தார்’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது வைக்கப்பட்டிருந்தது.

இந்த 5-வது வழக்கு இன்று (பிப்ரவரி 15, 2022) விசாரணைக்கு வந்தது. இதிலும் அவர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், லாலு பிரசாத் ஜார்க்கண்ட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

இப்படியான சூழலில்தான் இன்று மீண்டுமொரு முறை அவரை குற்றவாளி என நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம், இந்த தீர்ப்பை அளித்திருக்கின்றது.