செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோட்டை உளிமங்கலத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் (32) பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி, அப்பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி (32) என்பவரிடம், 25 லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். அதேபோல், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பலரிடமிருந்து பணத்தை வாங்கி முதலீடு செய்து ஏமாந்த அவர், பணம் வாங்கியவர்களிடம் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன், வேணு கோபாலுக்கு பணம் கொடுத்த அத்திப்பள்ளியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவரை கடத்தி, 25 லட்சம் ரூபாயை திரும்பி வாங்கியது. இதே பாணியில் வேணு கோபாலிடம் கொடுத்த பணத்தை வாங்க, கேசவமூர்த்தி முடிவு செய்தார். ஆனால், வேணுகோபால் சொந்த ஊருக்கு செல்லாமல் தலைமறைவானதுடன், ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த ஒருவரிடம் அடைக்கலம் அடைந்து அவரது கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையறிந்த கேசவமூர்த்தி தன் நண்பர்கள், 4 பேருடன், பலினோ காரில் ஓசூர் வந்தார். ஓசூர் பஸ் டிப்போ நுழைவாயில் அருகே நடந்து சென்ற வேணு கோபாலை காரில் கடத்தி, 25 லட்சம் ரூபாய் கேட்டு கேசவமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர். இந்த தகவல் ஓசூர் டவுன் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். ஓசூர் - ராயக்கோட்டை சாலையில், பைரமங்கலம் கூட்ரோடு பகுதியில் கடத்தல் கும்பல் வருவதை அறிந்த காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார், காரை தடுத்து நிறுத்தி, வேணுகோபாலை மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட, 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது கோட்டை உளிமங்கலம் வேணுகோபால், 32, வெங்கடாஜலபதி, 32, மனோஜ், 23, மணி, 29, கலுகொண்டப்பள்ளி ஹரிஷ், 32, என தெரிந்தது. அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.