டிஆர்எஸ் எம்எல்ஏவின் மகன் மிரட்டுவதாக தற்கொலை செய்து கொண்ட தெலங்கானா குடும்பத்தின் உறவினர்கள், தொடர்ந்து மிரட்டல்களை சந்திப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜனவரி 2-ஆம் தேதி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட நாகராமகிருஷ்ணா, தெலங்கானா மாநிலம் கொத்தகுடம் எம்எல்ஏவின் மகன் வானமா ராகவேந்திரா சொத்துத் தகராறில் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டியிருந்தார். தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏவின் மகனின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் உறவினர்கள், தற்போது எம்எல்ஏவின் மகனிடம் இருந்து மிரட்டல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலதிபர் நாக ராமகிருஷ்ணா, அவரது மனைவி ஸ்ரீலட்சுமி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக ஆந்திராவின் ராஜமுந்திரியில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, தங்களின் சொந்த ஊரான பாலோஞ்சாவுக்கு அவசரமாகத் திரும்பினர். அடுத்த நாள் அதிகாலையில், நாக ராமகிருஷ்ணா, அவரது மனைவி ஸ்ரீலட்சுமி மற்றும் மகள்களில் ஒருவரான சாஹித்யா ஆகியோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். 80% தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த அவரின் மற்றொரு மகள் சாஹிதி ஜனவரி 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி வெளியான வீடியோவில், பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணா இறப்பதற்கு முன் தற்கொலைக்கான காரணத்தை பதிவு செய்திருந்தார். அதில், தனது சொந்த குடும்பத்தில் உள்ள சொத்துத் தகராறில் சாதகமாக மத்தியஸ்தம் செய்வதற்காக தனது மனைவி ஸ்ரீலட்சுமிக்கு, டிஆர்எஸ் கட்சியின் கொத்தகுடம் எம்எல்ஏவான வனமா வெங்கடேஸ்வர ராவின் மகன் வானமா ராகவேந்திர ராவ் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதன்பின்னர் வானமா ராகவேந்திர ராவ் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, எம்.எல்.ஏ.வின் மகனின் ஆட்களிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக ஸ்ரீலட்சுமியின் சகோதரர் ஜனார்தன் குற்றம்சாட்டியுள்ளார். "அவர்கள் அங்கு வந்து என்னை மிரட்டினர், போலீஸ் புகாரை வாபஸ் பெற்றுவிட்டு பலோஞ்சாவை விட்டு வெளியேறும்படி கூறினர். நான் ஏற்கவில்லை என்றால் என் சகோதரி மற்றும் மைத்துனருக்கு ஏற்பட்ட கதியை நான் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் மிரட்டினார்கள்," என்று ஜனார்தன் கூறினார்.