குற்றம்

போலி நகையை கொடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளைஞரை கட்டி வைத்த ஊர் மக்கள்

webteam

நாகர்கோவில் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க வந்த கேரள இளைஞர் பணம் கேட்டு ஊழியர்களை மிரட்டியதால் ஊர் மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் இன்று கேரள இளைஞர் ஒருவர் தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என வந்துள்ளார். இதையடுத்து ஊழியர்கள் நகையை சோதனை செய்ததில் அது போலி நகை என தெரியவந்தது.

இந்நிலையில், இது தங்க நகை இல்லை. இதற்கு பணம் தர முடியாது என ஊழியர்கள் கூறியதால் ஊழியர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது அவர் ஊழியரை மிரட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், அவரை பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டார் காவல் நிலைய போலீசாரிடம் கேரள இளைஞரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.