குற்றம்

6 ஆண்டுகளாக கணவருக்கு சாப்பாட்டில் ’மருந்து’ கலந்து கொடுத்த மனைவி -கேரளாவை உலுக்கிய க்ரைம்

JustinDurai

கேரளாவில் கணவரின் சாப்பாட்டில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துப் பொருள் கலந்து கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் வசித்து வருபவர்கள் சதீஷ் சங்கர் (38) - ஆஷா (36) தம்பதியர். சதீஷ் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சதீஷ் தினமும் இரவு உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடும். மேலும் அவருக்கு உடல்சோர்வும் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்துள்ளார். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 7 வருடங்களுக்கு மேலாக அவருக்கு இந்தப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் ஒரு 20 நாள் சதீஷ் வீட்டில் சாப்பிடாமல்  வெளியில் கடைகளில் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் உடலில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. சாப்பிட்ட உடனே தூக்கம், உடல் சோர்வு எதுவும் ஏற்படவில்லை. அப்போதுதான் வீட்டு சாப்பாட்டில் ஏதோ இருக்கிறது என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனிடையே சதீஷ் தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்னைகளை கூறியுள்ளார்.  என் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார். அப்போது மனைவியின் தோழி கூறியதைக் கேட்டு சதீஷ் அதிர்ந்துப்போனார். ஆஷா உங்களுக்கு உணவில் ஒரு மருந்துப்பொருள் கலந்து கொடுத்து வருகிறார். என் கணவருக்கு இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்தார். அப்போதுதான் கணவன் நம் சொல்படி இருப்பார்கள் என்றார். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது' என்றார்.  

இதனையடுத்து வீட்டில் ரகசிய கேமரா வைத்து ஆஷா சாப்பாட்டில் மருந்து கலப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து சதீஷ் தன் மனைவி மீது பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சதீஷ் தன் மனைவி ஆஷாவை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும்  அதனை பொறுக்க முடியாமல் மருந்து கலந்து கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் கணவர் பெயரில் இருக்கும் சதீஷின் சொத்துக்களையும் தன் பெயரில் மாற்றிக்கொள்ள திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: