குற்றம்

கேரளா டூ கன்னியாகுமரி: சொகுசு காரில் மண்ணுளி பாம்பை கடத்திய 3 பேர் கைது

கேரளா டூ கன்னியாகுமரி: சொகுசு காரில் மண்ணுளி பாம்பை கடத்திய 3 பேர் கைது

kaleelrahman

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு சொகுசு காரில் சுமார் 2 கிலோ எடையுள்ள மண்ணுளி பாம்பை கடத்தி வந்த மூன்றுபேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு மண்ணுளி பாம்பு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை நாகர்கோவில் பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், சாக்கு மூட்டையில் சுமார் 2 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் வில்பட் மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த், சதீஷ் ஆகிய 3 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து இந்த பாம்பை மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி நாகர்கோவிலில் உள்ள ஒருவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி மூன்று பேரையும் கைது செய்து அவர்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதையடுத்து மண்ணுளி பாபம்பை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் அதனை அடர் வனத்திற்குள் விட நடவடிக்கை எடுத்தனர்.