கேரளாவை உலுக்கிய ஷரோன்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கிரீஷ்மா மற்றும் அவரது மாமா நிர்மல் குமார் என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. கிரீஷ்மாவின் தாயார் சிந்து குற்றவாளி அல்ல என்றும் தீர்ப்பில் உள்ளது. இச்சம்பவத்தில், இதுவரை நடந்தது என்ன? பார்க்கலாம்...
கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாரசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கேரளாவை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஷரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், கிரீஷ்மா தன் வீட்டில் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்ய நினைத்துள்ளார். அதற்கு இடையூறாக இருப்பாரென நினைத்து தனது காதலன் ஷரோன் ராஜாவை தன் வீட்டிற்கு வரவழைத்து, பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசரத்தில் நஞ்சு கலந்து ஷரோனுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார் கிரீஷ்மா என்பதும் அம்பலமானது.
இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கேரளாவின் நெய்யாட்டின்கராவில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், “இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாதான் முக்கியக் குற்றவாளி. பழரசத்தில் கலந்து கொடுத்த நஞ்சை வாங்கி வந்த கிரீஷ்மாவின் மாமாவான நிர்மல் குமரன் நாயர் இரண்டாவது குற்றவாளி” என்று தீர்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கிரீஷ்மாவின் தாயார் சிந்து விடுதலை செய்யப்பட்டார்.
கிரிஷ்மாவின் தாயார் விடுவிக்கப்பட்டது, ஷரோனின் குடும்பத்தார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிந்துவும் கிரிஷ்மாவும் இணைந்துதான் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்றும் சிந்துவும் முக்கிய குற்றவாளி என்றும் ஷரோனின் பெற்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை நாளை வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.