குற்றம்

விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு- நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

சங்கீதா

நடிகை ஒருவரின் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பிற்கு நிபந்தனைகளுடுன் கூடிய முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பலகட்ட சட்டப்போராட்டங்களுக்குப் பின்னர், நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். 

கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஒருவரை கொலை செய்ய, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக அவரது நண்பரும், இயக்குநருமான பாலசந்திர குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்தார். இதையடுத்து நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப், மைத்துனர் சுராஜ், கார் ஓட்டுநர் அப்பு உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் திலீப் உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்கெனவே ஐந்துக்கும் மேற்பட்ட முறை பல்வேறு காரணங்களால் கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து வந்தது. இந்நிலையில், இந்த முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அதில், நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப், மைத்துனர் சுராஜ், கார் ஓட்டுநர் அப்பு உள்பட 6 பேருக்கு, நிபந்தனைகளுடன் கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நடிகர் திலீப் உட்பட 6 பேரும், ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், 27-ம் தேதி வரை திலீப்பைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதைடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜாராகினர். அவர்களிடம் மூன்று நாட்களும் தலா 11 மணிநேரம் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அறிக்கையை குற்றப்பிரிவு கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.