கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளைஞர், காதல் தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலியின் அழைப்பின்பேரில் சந்திக்கச் சென்ற இளைஞரை, காதலியின் உறவினர்கள் கத்தியால் குத்தி கொலைசெய்ததாக தெரிகிறது.
கரூர் வஞ்சியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். 23 வயதான இவர் அந்தப் பகுதியில் சலூன் கடை நடத்திவருகிறார். இவர் அந்தப் பகுதியிலேயே உள்ளஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று கரூரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயில் அருகில் தனது காதலியை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஹரிஹரனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் ஹரிஹரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காதலியின் உறவினர்களை சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகின்றனர். காதல் தகராறில் நடந்த இந்தத் தாக்குதல், சாதி ஆணவக் கொலையா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.