மடாதிபதி
மடாதிபதி pt desk
குற்றம்

கர்நாடகா: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மடாதிபதி உட்பட இருவர் போக்சோவில் கைது

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகம் மாநிலம், துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில், ஹங்கரனஹள்ளி வித்யா சவுடேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான மடத்தின் மடாதிபதியாக பால மஞ்சுநாத சுவாமி (37) என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மடாதிபதி, தனக்கு இருந்த தோல் நோய் தொடர்பாக தனது முன்னாள் உதவியாளர் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார்.

மடாதிபதி

இதையடுத்து மருத்துவர் என இளம்பெண் ஒருவரை மடாதிபதிக்கு சிகிச்சை அளிக்க அபிஷேக் அழைத்து வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் மருத்துவரிடம் தனது உடலில் உள்ள தோல் நோய் பிரச்னைகளை காண்பிக்க மடாதிபதி மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் வாட்ஸ்ஆஃப் எண்ணுக்கு தன்னுடைய தோல் நோய் சம்மந்தமான புகைப்படங்களை அனுப்பி வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். இதை அந்த இளம்பெண் மருத்துவரும், உதவியாளர் அபிஷேக்கும் செல்போனில் பதிவு செய்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மடாதிபதி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடரந்து சைபர் க்ரைம் போலீசார் இளம்பெண் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு அபிஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அந்த விசாரணையில் வேறு சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில், மடாதிபதி தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அபிஷேக், தெரிவித்துள்ளார்.

மடாதிபதி

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் அசோக் கேவி தலைமையிலான போலீசார், மடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டதோடு சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து ஹூலியூர் துர்கா போலீசார், மடாதிபதி பால மஞ்சுநாத சுவாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மடாதிபதி மிகவும் செல்வாக்கு மிக்கவராகவும், மாநிலத்தில் உள்ள பல அரசியல்வாதிகளின் செல்வாக்கை பெற்றவராகவும் இருப்பதால், காவல் கண்காணிப்பாளர் இரவு நேரத்தில் கைது நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.