குற்றம்

ஒமைக்ரான் அச்சம்: மனைவி, குழந்தைகளை கொலை செய்த பேராசிரியர்!

JustinDurai
ஒமைக்ரான் கொரோனாவுக்கு பயந்து பேராசிரியர் ஒருவர் தன் மனைவி, இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுஷில் சிங். இவருக்கு சந்திர பிரபா (வயது 48) என்ற மனைவியும் ஷிகார் சிங் (வயது 18) என்கிற மகனும் மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மகளும் உள்ளனர். சுஷில் சிங் சமீப நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காகச் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். அதோடு சமீபத்தில் பரவிவரும் ஒமைக்ரான் கொரோனா குறித்து சுஷில் சிங்கிடம் அதிகப்படியான அச்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுஷில் சிங் தனது மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, இதுகுறித்து தனது சகோதரருக்கு அந்த பேராசிரியர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் 'ஒமைக்ரான் தொற்றிலிருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். எனவே அனைவரையும் விடுவிக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரர், உடனே அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றினர். அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமைக்ரானை பற்றியும் அவர் எழுதியுள்ளார். 'இப்போது, இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை' என்றும், கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்' என்றும் அவர் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதற்கு முன்பும் சுஷில் தன் மனைவியைக் கொலை செய்ய முயன்றிருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.