குற்றம்

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளார்

webteam

கன்னட திரைப்பட தயாரிப்பாளார் குமார் கௌரவ் இரண்டு வருடங்களுக்கு மேலாக பட்டியலினப் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளரான குமார் கௌரவ் கடந்த 2016 ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை பெங்களூருவில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் அழகாக உள்ளதாக கூறி சினிமாவில் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை சினிமா கதாநாயகி தேர்வுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அங்கு சென்றவுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

அதற்குப் பிறகு குமார் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. அத்துடன் அந்தப் பெண்ணின் நிர்வான படங்களை தன்னுடைய மொபைல் போனில் படம் எடுத்து வைத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் பல முறை அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். 

இதனையடுத்து பெங்களூரூ குமாரசாமி சதுக்க காவல்துறையை அணுகிய அப்பெண் குமார் கௌரவ் மீது புகார் அளித்தார். பெங்களூரு போலீசார் குமாரை கைது செய்து அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் 2016ஆம் ஆண்டு இந்தப் பெண்ணிற்கு 18 வயது நிரம்பாததால் அவரை பாலியல் வன்புணர்வு செய்த குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமான தனி பேட்டி ஒன்று நியூஸ்மினிட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.