குற்றம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

kaleelrahman

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில் முத்து ஆகியோர் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் முத்துராஜா, முருகன், வெயில் முத்து ஆகிய பத்து பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை தொடர்பாக விசாரணையை துவக்கிய சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களை சிபிஐ காவலில் எடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை ஏற்கெனவே  கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் இருந்த நிலையில் உடல்நலக் குறைவை காரணம் காட்டி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில் முத்து ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கும்படி வாதத்தை முன்வைத்தார். அப்போது சிபிஐ தரப்பு அரசு வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்ட விஜயன் செல்வராஜ், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள், உயிரிழந்தவர்கள் இருவரும் உயிரிழக்கும் போது உடலில் காயம் இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தாண்டவன், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.