கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பெண் காவலர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மேட்டு குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின்னர் இன்று மதியம் வீடு திரும்பினார். அப்போது அவரின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி பெண் தலைமை காவலர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.