குற்றம்

ஜோலார்பேட்டை: ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

webteam

வாணியம்பாடி அருகே ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தான்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது காவல்துறையினர் ரயிலில் உள்ள பொது பெட்டியில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ருத்ரமூர்த்தி (61) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஆந்திர மாநிலம் துளி என்ற பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு திருப்பூருக்குச் சென்று வட மாநில இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததாகவும் பயணச்சீட்டு கூட இல்லாமல் பயணித்ததும் விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.