குற்றம்

ஜார்கண்ட் டூ பெங்களூரூ: ரயிலில் கஞ்சா கடத்திய கேரள இளைஞர்கள் இருவர் கைது

webteam

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் திருச்சி கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பெங்களூர் வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்தனர்.

அப்போது இருக்கையின் கீழ் 20 பண்டல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ கஞ்சாவை, கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த அல்ஃதாப் நசீர் (20) மற்றும் ஜெட்லி (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்த இரு இளைஞர்களையும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.