குற்றம்

ஜேஇஇ தேர்வில் ஆள்மாறாட்டம்... தானே வந்து வாய்விட்டு மாட்டிக்கொண்ட மாணவர்...!

ஜேஇஇ தேர்வில் ஆள்மாறாட்டம்... தானே வந்து வாய்விட்டு மாட்டிக்கொண்ட மாணவர்...!

Sinekadhara

இந்திய அளவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர முக்கிய தகுதித் தேர்வான ஜேஇஇ தேர்வில் ப்ராக்ஸியை பயன்படுத்தி தேர்வில் ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தேர்வாளர் நீல் நக்‌ஷத்திர தாஸ் நடந்துமுடிந்த ஜேஇஇ 2020 தேர்வில் 99.8சதவீத மதிப்பெண்கள் எடுத்து ஐஐடியில் சேரும் தகுதியை பெற்றிருந்தார். தான் நியாயமான வழியில் இந்த மதிப்பெண்களை பெறவில்லை என்று சமூக ஊடகத்தில் இவர் பதிவிட்ட ஒரு போஸ்ட்டை வைத்து மித்ரதேவ் ஷர்மா என்ற நபர் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் அவரது போன் கால்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுதிய விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் விசாரித்ததில், தேர்வு நாளன்று ஆன்லைன் டெஸ்டிங் சென்டருக்கு சென்ற நீல், தனது பெயர் மற்றும் பதிவு எண்ணை மட்டுமே நிரப்பியிருக்கிறார். பிறகு கேள்விக்கான பதில்கள் வெளியே உள்ள ஒரு நபர் மூலமாக எழுதப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு கவுகாத்தியில் உள்ள அந்த தேர்வு மையத்தின் ஊழியரும், தேர்வு மேற்பார்வையாளரும் உதவியாக இருந்திருக்கிறனர்.

எனவே இந்தக் குற்றத்திற்கு உதவியாக இருந்த அவரது தந்தை மற்றும் தேர்வு நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுகாத்தி போலீஸ் கமிஷ்னர் எம்பி குப்தா தெரிவித்துள்ளார்.