பள்ளி மாணவியை அவர் வீட்டிலேயே வைத்து கொலை செய்துவிட்டு, அவருக்கு காதல் தொந்தரவு அளித்த வந்ததாக கூறப்படும் இளைஞனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சவுத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்கள் பாரதிதாசன் தீபலட்சுமி தம்பதியர். இவர்களது 16 வயதுடைய மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். பாரதிதாசன், தீபலட்சுமி இருவரும் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். தீபலட்சுமியின் தாய் வீடான கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய ராம்குமார். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
கருகம்புத்தூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி 16 வயது சிறுமி சென்று வந்த போது ராம்குமாருக்கு, நாளடைவில் அவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் ராம்குமார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் பாரதிதாசன் மற்றும் தீபலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். ராம்குமாரின் வீடு தேடிச்சென்று அவர்களது பெற்றோரிடம் எச்சரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மகள் தரையில் சடலமாகவும் மற்றும் ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்தோர் இதுகுறித்து காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவி காதலுக்கு ஒப்புக்கொள்ளாததால்தான் இளைஞர் அவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: “இது உங்கள் மாஸ்டர் பீஸ்; சொல்ல வார்த்தையில்லை” - ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளிய சமந்தா!