குற்றம்

குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரையா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை

webteam
குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வெளியான வைரல் வீடியோவை தொடர்ந்து, பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சமீபகாலமாக கடைகளில் வாங்கி உண்ணும் திண்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் சிலர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறக்கும் நிலை நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புக்கு முக்கியமான காரணமாக, உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படமே சொல்லப்படுகிறது. இதுகுறித்த அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சூழலில், சென்னை திருவள்ளூரில் சில கடைகளில் சிறுவர்கள் உண்ணும் கேக்கில் இரண்டு போதை மாத்திரைகள் இருப்பதாகவும், இதனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள திண்பண்டங்களை மொத்தமாக விற்கும் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த கடைகளில் கேக்குகளை பிரித்து கலப்படம் மற்றும் மாத்திரை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின், ‘சம்பந்தப்பட்ட கேக் வந்தால், அதை எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ எனவும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர்.
- நவீன் குமார்