குற்றம்

பட்டுச்சேலை நிறுவனத்தின் மீதான ரூ.250 கோடி கணக்கில் வராத பணம்: ரெய்டு தொடர்பான முழு விவரம்

webteam
தமிழகத்தில் சிட்பண்ட் மற்றும் சில்க்ஸ் நிறுவனமொன்று தொடர்பாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் 250 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தனியாருக்கு சொந்தமான பட்டுச்சேலை நிறுவனமொன்றில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக இரண்டு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. அதில் எஸ்.கே.பி சிட்பண்ட் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில், அந்நிறுவனம் சட்டவிரோதமாக சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சட்டவிரோத சிட்பண்ட் நிறுவனம் கடந்த சில வருடங்களாக முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரொக்கமாக 400 கோடி ரூபாய் அளவிற்கு பணப் பரிமாற்றங்கள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கமிஷன் மற்றும் பங்குகள் மூலம் கணக்கில் வராத வருமானம் சம்பாதித்து இருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடன் கொடுத்ததற்கான பிராமிசரி நோட், முன்  தேதியிட்ட காசோலைகள், பாதுகாப்பு கடன் பத்திரம் என பல சொத்துப் பத்திரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பட்டியல் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் வராத வட்டி வருமானங்களும் செலவினங்களும் முதலீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சொத்து ஆவணங்கள் இந்தச் சிட்பண்ட் நிறுவனத்திற்கு தொடர்பான உறுப்பினர்கள் பெயரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சொகுசு பங்களாக்கள் பண்ணை வீடுகள் சொகுசு கார்கள் உள்ளிட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள் ஆகவும், வருமானத்தை குறைத்து கணக்கு தாக்கல் செய்பவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிட்பண்ட் நிறுவனம் தொடர்பாக பல முதலீட்டாளர்களிடம் விசாரணை செய்ததில் தாங்கள் கணக்கில் வராத வருமானம் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 1.35 கோடி ரூபாய் ரொக்கமும் 7.5 கிலோ தங்க நகைகள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 
மேலும் கணக்கில் வராத வருமானம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.  சோதனையில், கடந்த நான்கு வருடங்களாக விற்பனையை குறைத்து காட்டியதும் தெரியவந்துள்ளது. மென்பொருள் மூலம் வரிகளை முறையாக செலுத்தாமல் கணக்கை குறைத்துக் காட்டி மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இவ்வாறாக சம்பாதிக்கப்பட்ட கணக்கில் வராத வருமானத்தை கொண்டு பல்வேறு முதலீடுகள் மற்றும்  நிலங்கள் ,சொத்துக்கள் வாங்கி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இந்த சில்க்ஸ் குழுமத்தின் உறுப்பினர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பி செலுத்தியதும் மற்றும் சிட்பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 44 லட்ச ரூபாய் ரொக்கமும் 9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 
மேலும் கணக்கில் வராத வருமானம் 100 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு வழக்குகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யவும் வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.