குற்றம்

கொலை முயற்சி வழக்கில் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

பைனான்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆசிப் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் ஆசிப் அகமது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் பைனான்சியர் கோதண்டராமன். இவர் 5 கோடி ரூபாய் கடனை திரும்ப கேட்டதற்காக, ஆசிப் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் ஆசிப் அகமது தன்னை ஆள் வைத்து தாக்கியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆசிப் அகமது மீது கொலை முயற்சி, பண மோசடி ஆகிய வழக்குகள் பதியப்பட்டன. இதில் கொலை முயற்சி வழக்கில் ஆசிப் முன் ஜாமின் பெற்றார். இருப்பினும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 17ஆவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை காவல் துறையினர் ஆசிப்பை கொ‌லை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பைனான்சியர் கோதண்டராமன் வழக்கை திரும்ப பெற கோரி, ஆசிப் அகமது தரப்பிலிருந்து தனக்கு தொடர்ந்து கொலை மி‌ரட்டல் வருவதாக குற்றம் சாட்டினார்.