குற்றம்

புதுக்கோட்டை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளை

webteam

புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அழகர் நகரில் வசிப்பவர் கோபிநாத். இவர் புதுக்கோட்டை ஆயுதப் படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபிநாத் தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அருகே இருப்பவர்கள் கணேஷ் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவையில் உள்ள ஆய்வாளர் கோபிநாத்திற்கு தகவல் கொடுத்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தற்போது அவரது வீட்டில் எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது குறித்த விபரம் கோபிநாத் கோவையிலிருந்து வந்த பிறகு தான் தெரியும் என்றும் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதக் காலத்தில் சின்னப்பா நகர், அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது இது 7வது சம்பவம் என்றும் இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை துரிதப்படுத்துவதோடு அங்குள்ள வீதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: ’ஹெல்லோ பிரபா ஒயின்சாப் ஓனருங்களா’-வடிவேலு பாணியில் டாஸ்மாக்கில் திருடியவர்கள் கைது