குற்றம்

ஆந்திரா: போலீஸ் துன்புறுத்துவதாககூறி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

Veeramani

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், போலீஸாரின் துன்புறுத்தல் தாங்காமல் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதாக அவர்கள் கடைசியாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளனர்.

கண்களில் கண்ணீருடன், குரல் நடுங்க, ஷேக் அப்துல் சலாம் வீடியோவில் பேச ஆரம்பிக்கிறார். அவரது மனைவியும் மகள் மற்றும் மகனும் திரையில் இருக்கிறார்கள் .அப்துல் சலாம் அழத்தொடங்கியதும், அவரின் மனைவி நூர்ஜஹானும் அழத் தொடங்குகிறாள், அதே நேரத்தில் குழந்தைகள் அப்பாவியாக பார்க்கிறார்கள்.  அதன்பின்னர் அவர்கள் பேசிய தற்கொலை வாக்குமூலத்தில் “போலீசார்  தன்மீது குற்றஞ்சாட்டிய இரண்டு குற்றங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுடைய சித்திரவதைகளை தன்னால் தாங்க முடியவில்லை” என்றும் தனது கண்ணீர் குரலில் அவர்  சொல்கிறார்.

அப்துல் சலாம் நந்தியாலில் ஒரு நகைக் கடையில் பணிபுரிந்து வந்தார். அங்கு சில மாதங்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. கடையின் உரிமையாளர் அப்துல் சலாம்தான் அந்த தங்கத்தை திருடியதாக சந்தேகித்து, வழக்கு பதிவுசெய்து காவல்துறையினரால் மோசமாக தாக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வாடகை ஆட்டோவை ஓட்டத் தொடங்கியபோதும், கடை உரிமையாளர் மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு  அப்துல் சலாமின் ஆட்டோவில் பயணம் செய்த , ஒருவர் தனது பையை காணவில்லை என்று தெரிவித்தார், இதற்காகவும் போலீசார் இவரை துன்புறுத்தியுள்ளனர். இந்த சூழலில்தான் அப்துல் சலாம் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பதிவு செய்த வீடியோவில் “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆட்டோ மற்றும் கடையில் நடந்த திருட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை. எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அதனால்தான் குறைந்தபட்சம் என் மரணம் மன அமைதியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். ” இவரது மனைவி நூர்ஜஹான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தார். இவர்களது மகள் சல்மா 10 ஆம் வகுப்பிலும், அவரது சகோதரர் கலந்தர் 4 ஆம் வகுப்பிலும் படித்துவந்தனர். பிறகு நவம்பர் 4 ஆம் தேதி, அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினர்  ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் சடலங்கள் நந்தியாலுக்கு அருகில், பன்யம் மண்டலத்தில் உள்ள கவுலூர் கிராமத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டன.

அப்துல் சலாமிடம் அவரது மனைவி குறித்து  போலீஸ் அதிகாரிகள் தகாத முறையில் பேசியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார். நகைக் கடையிலிருந்து தங்கத்தை அப்துல் சலாம் திருடிவிட்டதாக அவர்கள் கூறியதை நம்ப வைப்பதற்காக காவல்துறையினர் அப்துல் சலாம் குடும்பத்தின் நகைகளை பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க முதலமைச்சர்  ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட வட்ட ஆய்வாளர் சோமசேகர ரெட்டி, தலைமை கான்ஸ்டபிள் கங்காதருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அப்துல் சலாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணம் மூலமாக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதற்கும், அவர்கள் மீது பொய்யான வழக்குகள்  போடப்படுவதற்கும் இச்சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறியுள்ளார்.