குற்றம்

`ஆபாச வாட்ஸ்-அப் க்ரூப்ல உங்க நம்பர் இருக்கு... ஃபைன் கட்டுங்க’- பணம் பறித்த மர்ம நபர்கள்!

webteam

கரூரில் இளைஞர் ஒருவருடைய செல்போனில் ஆபாச படம் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பதாக கூறி, தாங்கள் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த 4 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

கரூர் தாந்தோணிமலை பகுதியை சுரேந்தர் (28). இவருடைய மொபைல் எண்ணுக்கு கடந்த 13-ம் தேதி செல்போன் அழைப்பொன்று வந்துள்ளது. அதில் தாம்பரம் க்ரைம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எஸ்.ஐ முருகன் பேசுவதாகவும், சுரேந்தருடைய செல்போன் வாட்ஸ்அப் எண் ஆபாச படம் எடுக்கும் வாட்ஸ்அப் குருப்பில் இருக்கிறதென்றும் கூறியுள்ளனர். இது சம்மந்தமாக ஆய்வாளர் விசாரிக்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு வரச்சொன்னதாகவும், வரவில்லை என்றால் கரூர் போலீசை வைத்து கைது செய்ய நேரிடும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளார்.

பின்னர், அபராதத்தை கட்டி பிரச்சனையை முடித்துக் கொள்ளும்படியும் இல்லாவிடில் வீட்டிற்கு போலீஸ் வந்து அவமானப்படுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து, சுரேந்தர் அந்த நபர்கள் கூறிய 'கூகுள் பே' எண்ணுக்கு ரூ. 5,000 அனுப்பியுள்ளார். பின்னர் புகார்தாரரும் அவரின் மனைவியும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி மீதி பணத்தை அனுப்பவில்லை என்றால் கரூர் போலீஸை வைத்து கைது செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மீதி பணத்தை கொடுக்காவிட்டால் வழக்குப் பதிவு செய்து வீட்டிற்கு காவலர்களை அனுப்புவதாகவும், அதை வைத்து அவமானப்படுத்துவதாகவும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து சுரேந்தர் True Caller செயலியில் பார்த்த போது Siddu siddu என்ற பெயரில் Spam பெயரில் ரிப்போர்ட் ஆகி இருப்பதாக கண்டதும் சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து அவர் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.



கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை செய்ததில், அந்த மர்ம நபர்கள் தங்களை சென்னை தாம்பரம் க்ரைம் போலீஸ் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் என போலியாக சுரேந்தரை நம்பவைத்து அச்சுறுத்தி மிரட்டி ரூ.5,000 பணம் பறித்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மாதவன் (19), கெளவுதம் சித்தார்த் (19), ஜான் பீட்டர் (19) சந்தன சொர்ண குமார் (19) ஆகிய 4 நபர்கள்தான் சுரேந்தரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

கோவைக்கு சென்ற தனிப்படை போலீசார் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நான்கு நபர்களை அடையாளங்களை உறுதி செய்து கோவை வடவள்ளியில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணை செய்ததில், இவர்கள் இதேபோல் கோவை, ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், இவர்கள் மீது முன்னதாகவே இது போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி விடுதலையானது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.