குற்றம்

பில்லி சூனியம், மாந்திரீகம் பெயரில் மோசடி: 2.5 சவரன் தாலிச்சங்கிலியை பறிகொடுத்த பெண்

JustinDurai
சென்னையில், பில்லி சூனியம் எடுப்பதாகக்கூறி, இளம் பெண்ணின் தங்கத் தாலியை நூதனமாகத் திருடிச்சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த பெண் நகையை பறிகொடுத்தது எப்படி? நடந்தது என்ன?
கொலை, கொள்ளை, போன்ற வன்முறைகளைப் போல், நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பெயரில் மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. "உங்களுக்கு, உறவினர்களே பில்லி சூனியம் வைத்து விட்டார்கள்" என்று பீதியை கிளப்பி, அவற்றை எடுத்து விடுகிறோம் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி, பணம், நகைகளை பறிக்கும் சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் தற்போது நடந்துள்ளது.
ராயப்பேட்டையச் சேர்ந்தவர் ரிஹானா பேகம். 18 வயதான இவருக்கு, திருமணமாகி 45 நாட்களே ஆகின்றன. ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தின் வாயிலில் காத்திருந்த இவர், அடையாளம் தெரியாத நபரிடம் தன் இரண்டரை சவரன் தாலிச் சங்கிலியை பறிகொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று, சாம்பிராணி புகை போடுபவர் போன்ற தோற்றத்தில் ரிஹானா பேகம் வீட்டுக்கு வந்த நபர், "இன்று உன்னுடைய கணவர் வீட்டுக்கு வரமாட்டார், அப்படி வந்தால் ரத்தத்தோடுதான் வருவார். அதைத் தடுக்க வேண்டுமென்றால், ஒரு பூஜை நடத்த வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். பீதியடைந்த ரிஹானா, பதற்றத்துடன் அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க, கழுத்தில் உள்ள தாலியைக் கழட்டித் தந்தால்தான் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர்.
குழப்பமும், அதிர்ச்சியும் ஆட்கொண்ட நிலையில், மேற்கொண்டு சிந்திக்க முடியாமல் ரிஹானா திகைத்திருக்க, நகையை வாங்கி பேப்பரில் மடித்து மண் குடுவையில் போட்டு, மந்திரங்கள் ஓதியபடி நேரத்தைக் கடத்திய நபர், ஒரு மணி நேரம் கழித்து பாணையைத் திறந்து தாலியை எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டுவிட்டாராம்.
சூன்யம் கழிக்கப்பட்டதாகக் கூறி 300 ரூபாய் பணத்தையும் பெற்று, நகையையும் திருடிச்சென்ற அந்த நபர் குறித்து, ரிஹானா பேகம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணையை தொடக்கி உள்ளனர். யானை குளம் ஆறாவது தெருவில் உள்ள சிசிடிவி கேமராவில், சாம்பிராணி புகை போடுபவர் போல வேடமணிந்த நபர் ஒருவர் ரிஹானா பேகம் வீட்டிற்குள் நுழைவதும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே செல்வதும் பதிவாகி உள்ளது. அதனைக் கைப்பற்றிய காவல்துறையினர், பழைய குற்றவாளிகளின் படங்களோடு ஒப்பிட்டு பார்த்து மோசடி ஆசாமியை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.