boy
boy pt desk
குற்றம்

நெல்லை: இளம் பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுடன் செல்ஃபி எடுத்த காவலர்கள்! நடந்தது என்ன?

webteam

ஒரு தலைக் காதல் விவகாரத்தில் நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல் குளத்தைச் சேர்ந்த இளம் பெண் 17 வயதுடைய சிறாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலை செய்த சிறாரை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் புதிதாக வீடியோ ஒன்று வெளியாகி விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது, கொலை செய்த சிறாருடன் காவல்துறையினர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படமும், காவல்துறையினர் சிறார் உடன் பேசும் உரையாடல் வீடியோ வும் வெளியாகியுள்ளது. கைது செய்வதற்கு முன்னர் அந்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது அவனை தடுக்க முயன்றபோது இவையெல்லாம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

police

நடந்தது என்ன?

காவல்துறையினர் பிடிக்க வருவதற்கு முன்பாக பிளேடால் தனது கழுத்தையும் அந்த சிறுவன் அறுக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து போலீசாரை கண்டதும் ஓடவும் முயற்சித்துள்ளார். அப்போது சிறுவனை தடுத்து பிடித்த போலீசார், சிறுவனின் உடலில் வேறு எங்கும் காயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிறுவனுடன் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளனர். இந்த கலந்துரையாடல் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காக்கி உடையில் கொலை செய்த சிறாருடன் காவலர்கள் செல்ஃபி!

மேலும் அந்த சிறுவனிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் கேட்டபோது, "என்னை தூக்கிலிடுங்கள். பலமுறை அவளிடம் பேசிப் பார்த்து விட்டேன். எந்த பலனும் இல்லை. அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன்" என சொல்லும் காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த சிறுவனுடன் காக்கி உடையில் போலீசார் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

கைதுக்கு பின் அவர் கைது செய்யப்பட்ட போது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறாரை கைது செய்யும்போது குற்றவாளியின் விசாரணையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக மூன்றடைப்பு காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர் ஜெபமணியை (பெண்) நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்வளவு அலட்சியமாக இருப்பதா? சிறாராக இருந்தாலும் கொலை குற்றவாளிதானே?

கொலை குற்றம் செய்த ஒரு சிறார் உடன் போலீசார் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் பொதுவெளிக்கு எப்படி வந்தது?. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது பொதுமக்களுக்கோ இது என்னவிதமான எண்ணத்தை உருவாக்கும்?. காவல்துறையினரே குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துமல்லவா?. கொலை குற்றம் செய்த சிறாரை பிடிக்கச் செல்லும் போது அவரை தற்கொலை முயற்சியில் இருந்து பாதுகாக்க காவல்துறை தரப்பில் சில அணுகுறையை கையாண்டதாக இருக்கலாம். உண்மையாகவே அப்படி நடந்திருந்தாலும் அது காவல்துறையின் வட்டத்திற்குள்ளே இருந்திருக்க வேண்டும். இப்படி பொதுவெளிக்கு வந்திருக்க கூடாது. அப்படி வருகிறது என்றால் இதன் தீவிரத்தன்மை வெளியே பரப்பியவர்களுக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தகம்.