குற்றம்

காவலரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமானேன்... கைக்குழந்தையுடன் போலீசில் புகாரித்த பெண்

காவலரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமானேன்... கைக்குழந்தையுடன் போலீசில் புகாரித்த பெண்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காவலர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தற்போது தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் ஆனால் அது தனது குழந்தை இல்லை என்று சம்பந்தப்பட்ட காவலர் தன்னை மிரட்டுவதாக கூறி பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையுடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகள் மௌனிகா (19). இவர் இன்று தனது கையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி தனது பெற்றோருடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில்.

தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கறம்பக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு பெட்ரோல் நிரப்ப வந்த காவலர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அந்த காவலர் கூறியதால் தனிமையில் பல இடங்களில் சுற்றியதாகவும் பல தருணங்களில் இருவரும் தனிமையில் இருந்ததாகவும் இதன் விளைவாக கடந்த பத்து மாதத்திற்கு முன்பு தான் கருத்தரித்ததாகவும் கூறினார்.

இதன்பின் அந்தக் காவலர் தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அதன்பின் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தனது வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட காவலர் தன்னை அழைத்துக் கொண்டுபோய் கறம்பக்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்ததாகவும் கூறினார்.

அப்போதுதான் சம்பந்தப்பட்ட காவலருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தனக்கு தெரியும் என்றும் அதன் பின்புதான் தன்னை அந்த காவலர் ஏமாற்றியதை அறிந்தேன் என்றும் இதனிடையே கடந்த ஒன்பதாம் தேதி தனக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது என்றும் கூறினார்.

தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவித்தும் அவர் தன்னை இதுவரையில் வந்து பார்க்கவில்லை என்றும் மாறாக இதுகுறித்து வெளியில் சொன்னால் தன்னையும் தன் குழந்தையும் கொலை செய்து விடுவதாக அந்த காவலர் மிரட்டுவதாகவும் மௌனிகா கூறினார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மௌனிகாவை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஒருவர் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு தற்போது குழந்தை பிறந்த பிறகு மிரட்டுவதாக இளம்பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையோடு புகார் கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்பிரச்சனை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தரப்பு விளக்கம் வேறுமாதிரியாக இருந்தது.


இந்த பிரச்சனை குறித்து ஏற்கனவே மழையூர் காவல் நிலையத்திலும் ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா முன்னிலையிலும் விசாரணை நடைபெற்றதாகவும் அப்போது இந்தப் பெண்ணின் தரப்பில் இருந்து யாரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட காவலரிடம் மட்டும் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டதில், அவர் தனக்கும் இந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தான் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகாத உறவு ஏதும் கொள்ளவில்லை என்றும் தான் டிஎன்ஏ உள்ளிட்ட அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் திட்டமிட்டு தன்மீது மௌனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் பொய்யான புகார்களை அளித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட காவலர் கூறுவதாகவும் தெரிவித்தனர்.