பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அவர் செல்போன் எண்ணையும் பதிவிட்ட ரியா என்ற போலி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை முலுண்ட் பகுதியை சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது போனுக்கு திடீரென ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன. ஒவ்வொரு அழைப்பிலும் ஏடாகூடமான பேச்சுகளை தொடர்ந்தனர். இதனால் கடுப்பான உமா, சிலரை திட்டிவிட்டு வைத்தார். ஆனால், விடாமல் போன் அழைப்பு வந்துகொண்டே இருக்க, சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வேலையை பார்த்தார். மீண்டும் ஆன் பண்ணிய போதும் இதே தொல்லை.
பிறகு தற்செயலாக பேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருந்த உமாவுக்கு அதிர்ச்சி. அதில் உமாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, ‘நான் ஃபிரியா இருக்கேன். ஜாலியா கடலைபோட எங்கிட்ட பேசுங்க’ என்று எழுதப்பட்டிருந்தது. கூடவே உமாவின் போன் நம்பரும்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உமா, முலுண்ட் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், ரியா பவீன் என்ற பெயரில் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை உருவாக்கி, அதில் உமாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து, போன் நம்பருடன் இப்படி வெளியிட்டிருப்பது தெரிய வந்தது. யார் இப்படி செய்திருப்பார் என்று தெரியாது என உமா கூறியதால், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த போலி ரியாவை தேடி வருகின்றனர்.