குற்றம்

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்: ஓராண்டுக்கு பின் கைது

Rasus

அரியலூரில் கணவனே மனைவியை கொன்று புதைத்த சம்பவம் ஒரு வருடத்திற்கு பின் அம்பலமாகியுள்ளது. மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவல்லி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2014ம் ஆண்டு கனகவல்லி கீழக்கரையைச் சேர்ந்த அருண் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பரணி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கனவல்லி குழந்தையுடன் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கனகவல்லியை கண்டுபிடித்துத்தரக்கோரி அவரது சகோதரர் மணிவண்ணன் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில், ஓராண்டுக்கு முன்பே கனவல்லியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவரது கணவர் அருண் தெரிவித்தார். அருண் அடையாளம் காட்டிய முந்திரி தோப்பில் இருந்து கனவல்லியின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கனகவல்லி சிலருடன் தகாத நட்பு வை‌த்திருந்ததை தாம் கண்டித்ததாதவும், கனகவல்லி அதனை நிறுத்திக் கொள்ளாததால் அவரை கொலை செய்ததாகவும் அருண் வாக்குமூலம் அளித்துள்ளார். அருண்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தங்கசாமி மற்றும் கார் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.