தனது மனைவியை அவரின் பெற்றோர் கடத்தி சென்றுவிட்டதாக கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா(25) என்பவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 5ஆம் தேதி கோவையில் சுயமரியாதை காதல் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், 19-ஆம் தேதி பெண்ணின் தந்தை, தாய் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னையும் தன் தாயையும் தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்றதாக கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கார்த்திகேயன் வீட்டில் பொருளாதார வசதி இல்லாததும், இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதாலும் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், பெண்ணின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர் என்பதால் காவல் நிலையத்தில் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.