குற்றம்

மனைவி மற்றும் குடும்பத்தாரை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம் - மனைவி உயிரிழப்பு

மனைவி மற்றும் குடும்பத்தாரை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம் - மனைவி உயிரிழப்பு

webteam

சத்தியமங்கலம் அருகே மனைவி மற்றும் அவரது குடும்பத்தை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தப்பியோடினார். மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் அடுத்த அக்கரைத்தத்தப்பள்ளியைச் சேர்ந்த சாஸ்தாமூர்த்தி - அமுதா தம்பதியின் மகள் பவித்ரா(23). சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயது மற்றும் 9 மாதத்தில் குழந்தைகள் உள்ளன.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியான பவித்ரா குழந்தைபேறுக்காக தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை பிறப்புக்கு பின் தாயார் வீட்டிலேயே தங்கிவிட்டார். ஒரு மாத்திற்கு முன் வீரமணிகண்டனுக்கும் மனைவி பவித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தியை மருமகன் வீரமணிகண்டன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதையடுத்து மாமனார் அளித்த புகாரின்பேரில் வீரமணிகண்டனை பவானிசாகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த வீரமணிகண்டன் நேற்றிரவு தனது நண்பர்களுடன் மாமனார் வீட்டுக்கு வந்து வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணவர் மனைவி இடையே நடந்த தகராறில் அரிவாளால் காதல் மனைவி பவித்ராவை வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது தடுக்க வந்த மாமனார் சாஸ்தாமூர்த்தி, மாமியார் அமுதா மற்றும் சாஸ்தா மூர்த்தியின் தாயார் சித்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை பவானிசாகர் போலீசார் தேடி வருகின்றனர்.