குற்றம்

தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

Sinekadhara

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களான குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கணேசனின் மனைவி பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக தஞ்சை ராஜா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25 ம் தேதி அவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய் பால் ஊட்டக் கூடாது என்பதால் குழந்தையின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றும் சாதனம் மூலம் திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது. உடல் நலம் பெற்ற குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது குழந்தையின் இடது கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியை நர்ஸ் கத்திரிகோலால் வெட்டியுள்ளார். இதில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக குழந்தையின் விரல் மீண்டும் தையல் போட்டு சேர்க்கப்பட்டது. நர்சின் அலட்சியம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், இதுகுறித்து இரு வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.