குற்றம்

சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? – மதுரை உயர்நீதிமன்றம்

Veeramani

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது, விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால்,  6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே,  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிசங்கர், சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதுகுறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.