online gambling
online gambling Twitter
குற்றம்

சங்க இலக்கியம் முதல் ஆன்லைன் யுகம் வரை... அசுர வளர்ச்சியில் சூதாட்டங்கள் வளர என்ன காரணம்?

PT WEB

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் என்றால் என்ன, ஆன்லைன் சூதாட்டத்தில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் என்னென்ன, சர்வதேச அளவில் இவ்விவகாரத்தில் பல்வேறு நாடுகளின் நிலைப்பாடுகள் என்னென்ன, சூதாட்டம் என்பது எப்படி உலகம் முழுக்க விரிவடைந்தது என்பதையெல்லாம் சமீபத்திய சில தரவுகளுடன் இங்கு பார்க்கலாம்.

சங்க இலக்கிய காலத்திலேயே தொடங்கிவிட்டது ‘சூதாட்டம்’!

சூதாட்டம் என்பது ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. அரசர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் பந்தயம், சீட்டு கட்டு, விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் சூதாடுவது தொடர்ந்து வந்த நிலையில், 1990களில் லாட்டரி டிக்கெட் விற்பனை தமிழ்நாட்டில் அமோகமாக இருந்தது.

இந்நிலையில் 2000 க்கு பிற்பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி - இணைய சேவை போன்றவையாவும் சூதாட்டத்துக்கு நவீன வடிவம் கொடுக்கத்தொடங்கின. அப்படி ஆன்லைன் வழியே சூதாட்டங்கள் அதிகரித்தன. முதலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஆன்லைன் சூதாட்டம் உயர்ந்தது. அங்கெல்லாம் கிட்டதட்ட 2005 முதல் 2015 வரை ஆன்லைன் சூதாட்டம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த ஆன்லைன் சூதாட்டமென்பது சீட்டுக்கட்டை வைத்தல்ல... விருதுகள், போட்டிகளை வைத்து! அந்தவகையில் அச்சமயத்தில் கால்பந்து, டென்னிஸ், விருது நிகழ்ச்சிகள், பந்தயம் போன்றவை ஆன்லைன் சூதாட்டம் வழியே நடைபெற்றது.

online gambling

பின் அந்த தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே இந்தியா வந்தடைந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை 2010 க்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் புரட்சியால், ஆன்லைன் சூதாட்டத்தின் சந்தை மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.

ஆன்லைன் சூதாட்டம் - வகைகள்!

ஆன்லைன் சூதாட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன

  1. நாமே பந்தயம் கட்டி நேரடியாக விளையாடுவது (ஆன்லைன் ரம்மி போல)

  2. ஏதேனும் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி பங்கேற்பது. (மற்றவர்கள் ஜெயிப்பார்கள் என நாம் பந்தயம் கட்டுவது. உதாரணமாக குதிரை பந்தயம் போல)

நாமே பந்தயம் கட்டி நேரடியாக விளையாடும் விளையாட்டுகள் தான் ரம்மி, ரௌலட், கேரம் போன்றவை. இதேபோலத்தான் சண்டை விளையாட்டுகள், போர் விளையாட்டுகள், பில்லியட்ஸ், கால்பந்து போன்றவை இன்னொருபக்கம். இவை எல்லாவற்றிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்று விளையாடி பணம் (இழந்து இழந்து) ஈட்டுவதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். அப்படித்தான் வளரத்தொடங்கியது சூதாட்டங்கள்.

‘குதிரை பந்தயம் போல இன்னொருவர்மேல் பணம் கட்டி விளையாடுவதுதான் இப்போது இல்லையே’ என நீங்கள் கூறலாம். உண்மையில், அது தன் வடிவத்தை மாற்றியுள்ளது. அவ்வளவே!

ஆம், வேறொருவர் மீது பணம் வைத்து விளையாடுவது, இப்போதும்கூட வழக்கத்தில் உள்ளது! சிறந்த உதாரணம், ஐபிஎல் போன்ற நேரங்களில் செயலிகள் வழியாக, போட்டிகளின் நிலவரத்தை தீர்மானித்து - தனிப்பட்ட வீரர்களின் திறனை முன்கூட்டியே கணித்து அவர்கள் மேல் பணம் கட்டுவதை சொல்லலாம். இதற்காகவே ஆயிரக்கணக்கில் பிளே ஸ்டோரில் செயலிகள் உள்ளன. சுமார் 10,000 மேற்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்படுகின்றன. இதுபோக லட்சக்கணக்கான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அதிகாரப்பூர்வ மற்றும் நிழல் இணைய உலகில் உலா வருகின்றன.

அதிர்ச்சி தரவுகள்:

இந்தியாவில் 2020 ஆம் வருடம் எடுத்த கணக்கெடுப்பின்படி 53 கோடி பேர் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இதே 2020-ல் 1 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்த ஆன்லைன் சூதாட்ட சந்தை, 2023-ல் 1.2 பில்லியன் டாலர் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கோவா, டாமன், சிக்கிம் போன்ற மாநிலங்களில் மட்டுமே சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி உள்ளன. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் ஒவ்வொருவரின் மொபைல் ஃபோன்களும் சூதாட்ட விடுதியாகவே மாறி உள்ளது!

ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களில் 75% பேர் அதிகப்படியான மன உளைச்சல் அடைவதாக தெரிகிறது.

Rummy

பிற நாடுகளில் நிலவரம் என்ன?

  1. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, மெக்சிகோ இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைன் சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது.

  2. ஐக்கிய அரபு அமீரகம், கம்போடியா, ஜப்பான், சிங்கப்பூர், வடகொரியா, கத்தார், போலந்து உள்ளிட்ட நாடுகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளன.

‘ஆரம்பத்தில் அதிகப்படியான சலுகைகள் கொடுத்துவிட்டு, போக போக பணத்தை அதிகம் எடுக்கும் வகையில் Algorithm வடிவமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிகளவில் பணத்தை ஏமாறுகின்றனர்’ என்கின்றனர் சைபர் வல்லுநர்கள். Virtual சூழல்களில் இன்பம் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து விரிவடையுமென்றும், அதை தவிர்க்க முடியாது என்றும் கணிக்கின்றனர் அவர்கள்.