குற்றம்

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி உள்பட 4 பேர்... சிக்கியது எப்படி?

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி உள்பட 4 பேர்... சிக்கியது எப்படி?

Sinekadhara

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ்போல் நடித்து தொன்மைவாய்ந்த 7 சாமி சிலைகளை கடத்தி கால்வாய்க்குள் பதுக்கி வைத்த கும்பல் சிக்கியது. 2 காவலர்கள், பாஜக நிர்வாகி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கியது எப்படி? 

தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை கடத்திவைத்து சிலர் பல கோடிக்கு விற்க முயற்சி நடப்பதாக மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுகுறித்து தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சட்ட விரோதமாக தொன்மையான சாமி சிலைகளை விற்க முயற்சி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அலெக்ஸ்சாண்டர் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் என்பது தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அலெக்ஸ்சாண்டர் 7 சாமி சிலைகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

சிலைகளை ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அய்யனார் கோயிலின் பின்புறம் உள்ள கால்வாய் ஒன்றில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 2 அடி உயரமுடைய பெரிய நடராஜர் சிலை, ஒன்றே கால் உயரமுடைய சிறிய நடராஜர் சிலை, ஒன்றரை அடி உயரமுடைய நாக கன்னி சிலை, ஒரு அடி உயரமுடைய காளி சிலை மற்றும் முருகன், விநாயகர், நாக தேவதை சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த 7 சாமி சிலைகளையும் அலெக்ஸ்சாண்டர் சுமார் ரூ. 5 கோடிக்கு மேல் விற்க முயற்சி செய்துவந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எப்படி இந்த தொன்மை வாய்ந்த சிலைகள் இவருக்கு கிடைத்தது என்பதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைதான அலெக்ஸ்ண்டரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளங்குமரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகநரேந்திரன் ஆகியோர் அலெக்ஸ்சாண்டருக்கு நண்பர்கள். இளங்குமரன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் ஆகி உள்ளார். நாகநரேந்திரன் திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளங்குமரன், நாகநரேந்திரன் ஆகியோருக்கு சேலம் எடப்பாடி அருகே மலையடிவாரத்தில் தொன்மை வாய்ந்த சாமி சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன், விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 2 பேரை இளங்குமரன், நாகநரேந்திரன் ஆகியோர் அழைத்துக்கொண்டு சேலம் எடப்பாடி அருகே உள்ள மலையடிவாரத்திற்கு சென்றனர்.

தாங்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எனக் கூறி சிலரை மிரட்டி 7 சாமி சிலைகளையும் கடத்தி வந்தனர். கடத்திய சிலைகளை அலெக்ஸ்சாண்டரிடம் கொடுத்து கோடிக்கணக்கில் விற்று தரும்படி கூறியது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அலெக்ஸ்சாண்டர் யாருக்கும் தெரியாமல் 7 சிலைகளையும் சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்து வந்துள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமைக் காவலர் இளங்குமரன், ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், மற்றும் கருப்பசாமியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் சிவன், விருதுநகரைச் சேர்ந்த கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

கைப்பற்றபட்ட சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தது என்பது குறித்தும் அவற்றின் தொன்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விரைந்து செயல்பட்டு இந்த வழக்கில் சிலைகளை மீட்டதோடு மட்டுமல்லாமல் முக்கிய நபர்களை கைதுசெய்த தனிப்படை போலீசாரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி வெகுவாக பாராட்டினார். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.