குற்றம்

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரூ.25 லட்சம் வரதட்சணை கேட்டு தொந்தரவு; மணமகன் மீது வழக்கு

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரூ.25 லட்சம் வரதட்சணை கேட்டு தொந்தரவு; மணமகன் மீது வழக்கு

JustinDurai

மார்த்தாண்டத்தில் நிச்சயக்கப்பட்ட பெண்ணிடம் கூடுதலாக ரூ.25 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டல் விடுத்ததாக மணமகன் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் மூவாற்றுகுளம் பிலாவிளை சாரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மனைவி டாஸ் கோல்டுவின் சுஜா. இந்த தம்பதியின் மகளுக்கு வரன் பார்த்து வந்தனர்.

அப்போது உத்திரம்விளையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வந்து, தனக்கு தெரிந்த எம்பிஏ படித்து நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலைசெய்யும் பையன் இருப்பதாக கூறினார். அதன்படி ஐயப்பன், அவரது மனைவி சுனிதா, ஆற்றூர் உத்திரம்விளையை சேர்ந்த மணமகனின் தாய் டெய்சி சிரோன்மணி ஆகியோர் பெண் பார்க்க வந்தனர். இதில் அவர்களுக்கு பிடித்ததால் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

அப்போது 55 பவுன் நகை, ரூ 5 லட்சம் ரொக்கம் பெண் வீட்டார் சீதனமாக தருவதாக கூறினர். அதோடு மூன்றரை பவுன் செயின் மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணத்தை அன்று மணமகனின் வீட்டாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மணமகன் முரலின், மணப் பெண்ணுடன் போனில் பேசி வந்தார். அப்போது அவர் புதிதாக கட்டி வந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்துவதாக கூறி உள்ளார். புதுவீட்டுக்கு பெண் வீட்டார் சோபா செட் வாங்கிக் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது முரலின் குடும்பத்தினர் மணப்பெண் வீட்டாரிடம் ரூ.25 லட்சம் கூடுதலாக வரதட்சணை தந்தால்தான் திருமணம் நடக்கும். இல்லை என்றால் திருமணம் நடக்காது என்று மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பெண்ணின் தாய் டாஸ் கோல்டுவின் சுஜா, தக்கலை டி.எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தார்.

இதன்படி மார்த்தாண்டம் போலீசார் முரலின், அவரது தாய் டெய்சி சிரோன்மணி, ஐயப்பன், அவரது மனைவி சுனிதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.