குற்றம்

சென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது

சென்னையில் 300 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது

webteam

சென்னையில் 300 கிலோ குட்கா போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, பா.ஜ.க பிரமுகர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக யானைக்கவுனி காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார், மீன்பாடி வண்டி ஒன்றில் 9 பார்சல்களாக 300 கிலோ குட்கா கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். இந்த கடத்தல் தொடர்பாக பூங்கா நகர் மன்னார் சாலையைச் சேர்ந்த ஜோத்தா ராம் என்பவரையும், பெரம்பூரைச் சேர்ந்த சாமிதாசன் என்பவரையும் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். 

இதில் சாமிதாசன் என்பவர் துறைமுகப்பகுதி பா.ஜ.க பிரமுகர் என தெரியவந்துள்ளது. மேலும் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்கள் பெங்களூருவிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னர் யானைக்கவுனியில் உள்ள குடோனில் வைத்து விநியோகம் செய்யப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.