குற்றம்

கிரைம் தொடர் பார்த்து மாமியார், மாமனாரை கொன்ற இளம் பெண்!

webteam

டிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் தொடர் பார்த்து மாமனார், மாமியார் மற்றும் கொழுந்தனை கொன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்கான் பகுதியை சேர்ந்தவர் கீதா டோமர். வயது 24. இவருக்கு கிரைம் தொடர்கள் பார்ப்பது அதிகம் பிடிக்கும். சேனல்களில் வெளியாகும், ’கிரைம் பேட்ரோல்’ உள்ளிட்ட தொடர்களை விரும்பிப் பார்ப்பார். இவரது கணவர் போதை பார்ட்டி. கடந்த ஆறு மாதத்துக்கு முன் போதை அதிகமாகி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாமியார் புஷ்பா (60), மாமனார் சத்பால் (65), கொழுந்தன் பங்கஜ் குமார் (38) ஆகியோரோடு வசித்து வந்தார். ஒரே வீட்டில் அவர்கள் கீழ்பகுதியிலும் கீதா, மேல் பகுதியிலும் வசித்து வந்தனர். 

இந்நிலையில் வீட்டில் சொத்து தகராறு வெடித்தது. இவர்களுக்கு ரூ.18 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறதாம். மாமனார், மாமியார், கொழுந்தன் ஆகியோரை கொன்று விட்டால் சொத்தை அபகரிக்கலாம் என திட்டம் போட்டார் கீதா. இதற்கு வீட்டில் வேலை பார்த்த விகாஷ் என்ற ராஜஸ்தான் இளைஞன் உதவ முன்வந்தான். 

கிரைம் தொடரில் ஆட்களை கொன்று தீவைத்து எரித்துவிட்டால், யார் என்று அடையாளம் காண்பது கஷ்டம் என்று தெரிந்துகொண்டாராம். 
இதையடுத்து மூன்றுபேரையும் கழுத்தை நெறித்துக்கொன்று உடலை ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் எரித்தனர். இதற்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் காரை வாங்கிச் சென்றுள்ளனர். தங்கள் காரை பயன்படுத்தினால் தெரிந்துவிடும் என்பதால் இப்படி ஐடியாவாம்.

சத்பாலின் மகள் ஹேமலதா பெற்றோரை காணாததால் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கீதாவையும் விகாஷையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமனார், மாமியார், கொழுந்தனை  மருமகளே கொன்று எரித்தது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.