குற்றம்

திருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது

திருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது

webteam

கோவையில் நகைப்பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பட்டதாரி இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை செட்டிப்பாளையம், கோவில்பாளையம், சூலூர் ஆகிய புறநகர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து கொள்ளை, பெண்களிடம் நகைப்பறிப்பு, போன்ற குற்றசம்பவங்கள் நடந்து வந்தது. இதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில்,செட்டிப்பாளையம் சங்கமம் நகரில் வீட்டை திறந்து திருடிய வழக்கில் இரு இளைஞர்கள் பிடிபட்டனர். 


 
இந்நிலையில் காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்தனர். விசாரனையில் மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கோவையை சேர்ந்த மோகனகிருஷ்ணன் (21), கௌதம் (21), நிதிஷ் (21), மிதுன் (20) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில், கௌதம் பொறியியல் பட்டதாரி, நிதிஷ் பாலிடெக்னிக் படிப்பையும், மோகனகிருஷ்ணன் தொழில்நுட்ப படிப்பையும் பாதியில் கைவிட்டவர்கள்.மிதுன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர். நால்வரும் நண்பர்கள் என்பதால், வேலை செய்ய பிடிக்காததால் இதுபோன்று குற்றசம்பவங்களில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தில் வசதியாக வாழ எண்ணி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நால்வரிடமிருந்தும் சுமார் 31 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.