குற்றம்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

webteam

கோவில்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த அரசுப் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ராஜாத்தி (45) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். முன்னதாக இவர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1994 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார்.

இந்நிலையில் இவர், ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் பெற்றிருந்தாக தெரிகிறது. இதனை 77 மதிப்பெண் பெற்றது போல் திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கடந்த 2002 ஆண்டு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்து வரும் ராஜாத்தி, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் மீது கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.