குற்றம்

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் நடவடிக்கை: அரசு புதிய உத்தரவு

webteam

ழல் முறைகேடு செய்து நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும்போதும் அந்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி முடிவெடுக்கலாம் என்று அதிகாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், கிரிமினல் வழக்கு தொடர்பாகவும் பல்வேறு உத்தரவுகளையும் அறிவுரைகளையும் அரசு பிறப்பித்துள்ளது. இந்த அறிவுரைகள் ஒரு புறம் இருந்தாலும், சில நிகழ்வுகளில் ஒழுங்கு நடவடிக்கைகளை தனி அதிகாரம் பெற்றுள்ள அதிகாரிகளும் எடுத்து வந்தனர்.

ஆனால் இதுபோன்ற துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும்போது அதில் சம நிலை பின்பற்றப்படவில்லை. பல நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் மீதான குற்ற வழக்கு விசாரணை, கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், அதே குற்றச்சாட்டுக்கான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பதில்லை. சில நிகழ்வுகளில், கோர்ட்டின் உத்தரவு வரும்வரை ஒழுங்கு நடவடிக்கையை எடுக்காமல் அதிகாரிகள் தள்ளி வைத்துவிடுகின்றனர். ஆனால் பல வழக்குகளில் இதுபோன்ற பிரச்னைகளில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதே முறைகேடு தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்று கூறியுள்ளது. ஏனென்றால், நீதிமன்றம் விசாரணையில் குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை பொருத்த அளவில், அந்த ஊழியர் குற்றம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்தாலே முடிவெடுத்துவிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் பலர் நீண்ட நாட்களாக இடைக்கால பணிநீக்கத்தில் வைக்கப்படுவதோடு, ஆண்டுக் கணக்கில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பதில்லை.

இந்த சூழ்நிலையைக் கருதி, இதுபோன்ற விஷயங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறையை உத்தரவாக அரசு பிறப்பித்துள்ளது. இதில் தற்போதுள்ள நடைமுறையையும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் அரசு ஆராய்ந்து பார்த்தது. அதன்படி, அரசு ஊழியர்களின் முறைகேடு நடவடிக்கையில் (கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்படும் குற்றங்கள் உள்பட) ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்தளிக்கிறது.

அரசுப் பணியை செய்வதில் அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பாக குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம் என்பது தற்போது நியமிக்கப்பட்டுள்ள சட்டமாக உள்ளது. இரண்டு வகையான விசாரணையின் தன்மையும், அதில் முடிவெடுக்கும் நிலையும் வெவ்வேறானவை. எனவே நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணை நடக்கும்போது, துறை ரீதியான விசாரணையையும் மேற்கொள்ளலாம். குற்ற வழக்கில் கூறப்படும் தீர்ப்பு எந்த வகையிலும் துறை ரீதியான விசாரணையில் எடுக்கப்படும் முடிவை பாதிக்காது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்போது அனைத்து அசல் ஆவணங்களையும் போலீசார் எடுத்துச் சென்றுவிடுவார்கள். எனவே துறை ரீதியான நடவடிக்கைக்காக அந்த அசல் ஆவணங்களின் உண்மை நகலை வாங்கி ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம்.

ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு அரசு ஊழியர் ஆஜராகாவிட்டாலோ, எழுத்துப்பூர்வமான அறிக்கை அளிக்காவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டாலோ, ’எக்ஸ்பார்ட்டி ஆர்டரை’( விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர் வராவிட்டாலும் பிறப்பிக்கப்படும் உத்தரவு) விசாரிக்கும் அதிகாரி பிறப்பிக்கலாம். தேவைப்பட்டால் இடைக்கால பணிநீக்க உத்தரவையும் பிறப்பிக்கலாம்.

விசாரிக்கும் அதிகாரி கூறும் இடத்தில் தொடர்ந்து தங்கியிருக்கவில்லை என்றால் அவருக்கு சம்பளமும் வழங்கத் தேவையில்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையின்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடர்ந்துள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஏனென்றால், நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்துள்ள வழக்கை இந்த முடிவு பாதிக்கக் கூடும். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, வேலையில் இருந்து ஊழியரை நிரந்தர நீக்கம் (டிஸ்மிஸ்) செய்வது போன்ற பெரிய முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்தால், குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை அந்த முடிவை நிறுத்தி வைக்கலாம்.

குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டால், அந்த ஊழியரை அரசு ஊழியர் ஒழுங்கு விதியின் கீழ் விசாரிக்க முடியாது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் விடுதலை தீர்ப்பு, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவை பாதிக்காது. முறைகேடு செய்த அரசு ஊழியர் (குற்ற வழக்கிலும் சிக்கி இருப்பவர்) மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

-ரமேஷ்