விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து மேற்சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் வணிக வளாகத்தில் முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நினைவு திரும்பவில்லை. அதனால், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த நிலையில், முகம் முழுவதும் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு தேவையான சிகிச்சையளிக்கும் வசதி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அவரை உடனடியாக சென்னை அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய, கோணை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், சக்கராபுரம் பழைய காலனியை சேர்ந்த துரை, குபேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே போதிய வசதி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி கூறினார்.