குற்றம்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி – பெண் உட்பட மூவர் கைது

webteam

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 45 பேரிடம் ரூ.2 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய 3 நபர்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தான், ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் தனது மகள் ஆனந்தி மதுரையில் ரயில்வே செக்சன் ஆபீஸராக பணிபுரிந்து வருவதாகக் கூறியுள்ளார். அவரோடு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கரூர் தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் நகசை;ர சேர்ந்த கருப்பண்ணன் மற்றும் 45 நபர்களிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடியே 7 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

பணம் கொடுத்த நபர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ரங்கநாதன் தனது வங்கி காசோலையை கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பல மாதங்களாக வேலை வாங்கித் தராத காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கண்டனர்

அப்போது கருப்பண்ணன் என்பவரே 45 நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ரெங்கநாதனின் வங்கி காசோலையை தன் கைப்பட நிரப்பி கொடுத்துள்ளார். கருப்பண்ணன், ரெங்கநாதன், ஆனந்தி, ரமேஷ் ஆகிய 4 பேரும் கூட்டு சேர்ந்து 45 பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை தங்களுக்குள் பிரித்துக கொண்டு ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், ரெங்கநாதன் தூத்துக்குடியில் சுப்பையா என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுப்பையா கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரெங்கநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்;, கொரோனாவல் பாதிக்கப்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவினர், வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சுந்தரவதனம் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து, ஆனந்தி, ரமேஷ் மற்றும் கருப்பண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின்பு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.