குற்றம்

கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று மோசடி - 10 பேர் மீது வழக்குப்பதிவு

Sinekadhara

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து கடன்பெற்ற மோசடி தொடர்பாக, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 18 ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், போலி நகைகள் அடகு வைத்து பணம் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வங்கியின் எழுத்தர்கள் சரோமணி, சுந்தர்ராஜ், சிவலிங்கம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வங்கியின் தலைவர் சுந்தரராஜன், தனது பதவியை ராஜினாமா செய்தார். வங்கி இயக்குநர்களின் ஒருவரான கிருஷ்ணசாமி என்பவர், 14 வங்கி கணக்குகளில் போலி நகைகளை அடகு வைத்து 11 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன்பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமானது. திருச்செங்கோடு சரக கூட்டுறவு வங்கிகளின் துணைப் பதிவாளர் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணசாமி, சரோமணி, சிவலிங்கம், சுந்தர்ராஜ் மற்றும் கூட்டுறவு வங்கியின் உறுப்பினர்கள் 6 பேர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கி இயக்குநர் கிருஷ்ணசாமி, அடகு வைக்க கொண்டுவந்த நகைகள் தங்கம்தான் என்றும், அதன் பின்னர் யாரேனும் மாற்றியிருக்கக் கூடும் என்று நகை மதிப்பீட்டாளர் அங்கமுத்து கூறியுள்ளார். தற்போது மோசடி வெளியாகியுள்ள நிலையில், போலி நகைகளை மீட்க தன்னிடம் 5 லட்சம் கொடுக்குமாறு மிரட்டி இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளதாக அங்கமுத்து குற்றம்சாட்டியுள்ளார்.