குற்றம்

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைது

JustinDurai

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்தபோது சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசிய பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டதாகவும், தகவல் பகிர்வு செய்ததாகவும் எழுந்த புகாரில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ கைது செய்தது. முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது சித்ரா ராமகிருஷ்ணா உரிய பதிலை அளிக்கவில்லை என்றும் குறிப்பாக உளவியல் வல்லுநர் மூலம் விசாரித்தபோதும்கூட முன்னுக்குப் பின் முரணாகவே பேசியதால் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: திருப்பூரில் நகைக்கடையில் கொள்ளை; கைது மகாராஷ்ட்டிராவில் - சுவாரஸ்யமான தேடுதல் வேட்டை