குற்றம்

போலியாக வழங்கப்படும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் : கோவையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Veeramani

கோவையில் வாகன புகையை பரிசோதிக்காமலேயே புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போலியாக மாசுக் கட்டுப்பாட்டு சான்றுகள் வழங்கப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் தமிழ்நாடு போக்குவரத்து துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாடு சான்று (பியுசி) பெற்றிருப்பது கட்டாயமாகும். அதை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த சான்று இல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம், வாகன தகுதிச் சான்று உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை. வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போதும் புகை பரிசோதனை சான்று தேவைப்படுகிறது.

இவ்வாறு சான்று அளிப்பதற்கென போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகன புகை பரிசோதனை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கோவை உட்பட பல மாவட்டங்களில் அண்மைகாலமாக அனுமதி பெறாமல் போலியாக வாகன புகை பரிசோதனை சான்றுகள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறையிடம் இதுபோன்று போலியாக வாகன புகை பரிசோதனை மையம் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்

கோயம்புத்தூர் கன்சியூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு. கோவை நீலம்பூர் புறவழிசாலையில் ராவத்தூர் பிரிவு அருகேயுள்ள ஒரு இடத்தில் தனது வாகனத்தின் புகையை பரிசோதித்தபோது, அளவுகள் அனைத்தும் பூஜ்ஜியம் என பதிவு செய்யபட்டிருந்ததாலும், பரிசோதனை மையத்தின் முத்திரை ஏதும் வைக்கப்படாததாலும், அந்த சான்று மீது சந்தேகம் எழுந்ததால் அதே நாளில் சிங்காநல்லூரிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட வாகன புகை பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து அசல் சான்று பெற்றபோது, அதில் உரிய விளக்கத்துடன் இருந்தது தெரியவந்துள்ளதாக லோகு, புகார் அளித்துள்ளார். எனவே, போலி மென்பொருள் மூலம் சான்று அளித்து வாகன ஓட்டிகளை ஏமாற்றி வரும் மையங்கள் மீதும், அதற்கு உடந்தையாக உள்ள அலுவலர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரு கணினி மற்றும் பிரிண்டரை வைத்துக்கொண்டு வாகனத்தின் புகையை பரிசோதிக்கும் கருவி ஏதும் இல்லாமல் வாகனத்தின் புகைப்படத்தை மட்டும் பெற்றுக்கொண்டு போலியாக சான்று வழங்கி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளவர்,  இதற்கு கட்டணமாக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் தொகையாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.100, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.200 வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.